...போதும் போதும்! இனி நூறு ஜன்மங்களுக்குப் போதும்! இனி உங்களுடன் க்ஷேத்திரங்களைப் பார்க்கப் புறப்படுவதைவிட சந்திக்கரையில் சோறு பொங்கி உண்ணலாம். எங்கு போனாலும் அவஸரமா! எங்கு சென்றாலும் அதிகாரந்தானா! ஒரு புண்ணிய க்ஷேத்திரம் என்றால் ஒரு நாழிகை முன் பின்னாகத்தான் எல்லாக் காரியங்களும் நடக்கும். உங்களுக்கோ சாப்பாட்டு விஷயத்தில் ஒன்றாவது தவறக்கூடாது! சுவர்க்கத்துக்குப்போயும் கஷ்கத்தில் மூட்டை என்று சொல்லுகிறபடி திருப்பதி, காளஹஸ்தி சென்றும் உங்கள் சுசுருஷையே எனக்கு பெருங்காரியமாயிருந்தது! காளஹஸ்தியில் கருணைக்கிழங்கைக் கண்டால் அவ்விடத்திலேயே அதை வாங்கி வறுத்துப் பேரி செய் என்று ஜம்பமாய்ச் சொல்லி விடுகின்றீர்கள்! அதற்கு இரும்பு சட்டி வேண்டுமே. அவைகளுக்கெல்லாம் போனவிடங்களில் சௌக்கியமிருக்கின்றதா இல்லையா என்பதை விசாரிக்கிறதேயில்லை! முளைக்கீரையைக் கண்டால் மசி: அரைக்கீரையைக் கண்டால் அம்பட்டபாஜி செய் என்று இந்தப்படி என் பிராணனை எடுத்துவிட்டீர்கள். சேலத்தில் நமது ஊரில் நாம் வறுவலையும் மசியலையும் கண்டதுமில்லை; தின்றதுமில்லை! காளஹஸ்தியிலும் திருப்பதியிலுந்தான் அவைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்! நல்ல நாக்கு உங்களுடைய நாக்கு!
கூடத்தில் நூறு சந்தனக்கட்டைகள் அடுக்கியிருந்தன. இரண்டு சிறுகட்டைகளைப் பொறுக்கி நான் நமது மூட்டைகளில் ஒளித்து வைத்தேன். ஒருவருக்கும் தெரியாதபடி துணியைப் போட்டு சுற்றியிருந்தேன். நீங்கள் என்ன மூட்டை கணக்கிறது என்று சொல்லி திருடியை சோதிப்பதுபோல் என் மூட்டைகளை சோதித்து அந்த சந்தனக்கட்டைகளை வீசி எறிந்து என்மேல் நாய் விழுகின்றாற்போல் விழுந்தீர்களே! அந்த அவமானம் எனக்கு ஒருபொழுதும் ஆறவே ஆறாது!

