Author: K.Rathnam
கொங்கு வட்டார நாவலாசிரியராக, ஆர்.ஷண்முகசுந்தரத்துக்குப் பிறகு, தமது 'கல்லும் மண்ணும் நாவலுக்காகச் சிறப்பிக்கப்பெறுபவர் க.ரத்னம். பண்பாட்டு இனவியல் ஆவணமான எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்' என்ற ஏழு தொகுதிகளைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காகத் தமிழாக்கம் செய்து பாராட்டுகளை இன்றும் பெற்றுவருபவர். ஜாய்ஸ், செகாவ் கதைகளைத் தமிழாக்கியிருக்கிறார். மிகப் பழைய அரிய பதிப்பு நூல்களைச் சேகரித்து நூலகமாக வைத்திருந்த புத்தகத் தொகுப்பாளர் என்ற அருமையும் இந்த அரசு கலைக்கல்லூரித் தமிழ் பேராசிரியருக்கு உண்டு. எல்லாவற்றையும் விட தமது அயராத உழைப்பால் தமிழகத்துப் பறவைகள் என்ற அபூர்வமான வண்ணப் படங்களுடன் கூடிய தகவல் களஞ்சியப் புத்தகத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு, தமிழகத்தின் சலீம் அலியாகப் பெருமைப்படுத்தப்படும் பறவையியல் அறிஞர் என்ற தனிப்பெரும் சாதனையாளர் இவர். ஒரு படைப்பாளியாகத் தாம் வலசை சென்ற வாழ்க்கை அனுபவங்களை இந்தச் சுயசரிதை நூலில் சுவையாகத் தந்திருக்கிறார் நாவலாசிரியர் க.ரத்னம்.

