வெங்கட்ரமணன் - தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் லேசர் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பிரிட்டனில் காமென்வெல்த் லீவர்ஹ்யூம் ஆராய்ச்சியாளராகவும், போர்ச்சுகலில் வருகைதரு ஆராய்ச்சியாளராகவும், ஐப்பான் அரசாங்க அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகத்தின் வரவேற்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். இடையில் இரண்டு வருடங்கள் இந்திய அணுசக்தித் துறையில் விஞ்ஞானியாக இருந்தார். தற்போது கனடாவில் Photonics Research Ontario என்னும் ஆய்வுக் கூடத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். கணினியிலும் தளையறு மென்கலனிலும் ஆர்வம் கொண்ட இவர், கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை நெறிப்படுத்தும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) என்ற பன்னாட்டு அமைப்பின் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூல நிரலிகள் குழுவிற்குத் தலைவராக இருக்கிறார். tamillinux.org என்ற இணைய தளத்தையும் நடத்தி வருகிறார்.
கனடாவின் Tamil Vision Inc. என்ற தொலைக்காட்சியிலும், வானொலிகளிலும் வாராந்திர அறிவியல் நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார். இவரது சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள் இணைய இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.
டொரண்டோ நகரில் மனைவியுடனும் இரு மகன்களுடனும் வசித்து வருகிறார்.

