Author: Kala Subramaniyam
வடமொழி இலக்கியத்தில், 'திருக்ஷ்ய காவ்யம்' (பார்க்கப்படக்கூடிய காவியம்) எனப்படும் நாடக காவியத்தில் காளிதாசனுக்கு முன்னோடியாகவும் அவனது வணக்கத்துக்குரியவனாகவும் விளங்கும் நாடக்கர்த்தா பாஸ மகாகவி. வடமொழி நாடகத்தின் சிகர சாதனைகளை நிகழ்த்தியுள்ளவர் பாஸன் என்பதே இன்றைய விமர்சன நோக்கு.
வழக்கமாக வடமொழிப் பண்டிதர்களும் அவர்களின் பார்வையை ஏற்றுக்கொண்ட மேலை நாட்டவரும் காளிதாசனையே முதலிடத்தில் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாஸனின் நாடகங்கள் அதைத் தவிடுபொடியாக்கிவிட்டன.
காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தை விட எவ்வளவோ உயர்ந்த இடத்தில் விளங்குவன பாஸனின் ஸ்வப்ன வாஸவதத்தா, ப்ரதிமா போன்ற காவ்யங்கள் என்பதை வலியுறுத்தவே, பிரதிமை என்ற இந்தப் புதிய தமிழாக்கம் இப்போது வெளியிடப்பெறுகிறது. தமிழினி வடமொழி இலக்கிய வரிசையில் வரும் ஐந்தாவது நூல் இது. இந்திய இதிகாசமான ராமாயணத்திலிருந்து ஒருசில அபாரமான நாடகத் தருணங்கள், இதில் நிகழ்த்துமுறையாக விவிதம் கொண்டுள்ளன.

