Author: T.Kannan
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க சமூகப் போராளியாக இருந்து, அபார்த்தீடு என்கிற இன ஒதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொணர்ந்து, அந்நாட்டின் குடியரசுத் தலைவரானார். அவர் உலகளவில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில், 1940களில் உறுப்பினராகச் சேர்ந்து, இனவாரியாகப் பிரிவுற்றிருந்த தென்னாப்பிரிக்காவில், வெள்ளையினச் சிறுபான்மையினர் செலுத்திய ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல அமைதியான போராட்டங்களுக்கும் ஆயுதமேந்திய கலகங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தினார். அவரது செயல்பாடுகள் அவரைக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குச் சிறையில் அடைபட வழிவகுத்தன; அபார்த்தீடு என்ற இன ஒதுக்கல் கொள்கையை எதிர்ப்பதே அவரது இயக்கத்தின் முதன்மைப் போராட்டம். 1990-ல் விடுதலை செய்யப்பட்ட பின், இன ஒதுக்கல் ஒழிப்பில் பங்கேற்று, 1994-ல் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவரானார். நாட்டில் நிகழ்ந்த பெருமாற்றங்களை மேற்பார்வையிடப் பல்வேறு இனப் பிரதிநிதிகளைக் கொண்ட அரசை அமைத்தார். 1999-ல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றபின், அமைதிக்காகவும் சமூக நீதிக்காகவும் தொடர்ந்து உழைத்தார். 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

