Author: Kaniyan Balan
எண்ணியம், சிறப்பியம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் வட இந்தியத் தத்துவ உலகில் வேதகாலத்தின் இறுதிக்காலம் முதல் 1500 வருடங்களுக்கு மேலாக பெரும்புகழ் பெற்றிருந்தன. தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து இருந்துவந்த நகர அரசுகள்தான் அம்மெய்யியல் சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்வதற்கான பின்புலமாக இருந்துள்ளன. இந்த எண்ணியம், சிறப்பியம் குறித்தும் அவற்றைத் தோற்றுவித்த தொல்கபிலர் கணாதர் போன்றவர்கள் குறித்தும் வானமாமலை. சட்டோபாத்தியாயா, பிரேம்நாத் பசாசு போன்றவர்கள் தரும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் பேசப்பட்டுள்ளன. பழந்தமிழ்ச்சமூகம் பொருள் முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து க.நெடுஞ்செழியன் தரும் கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் உள்ள பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் குறித்தும், தொல்காப்பிய அடிப்படையில் பழந்தமிழகத்தில் இருந்த வகுப்புகள் (classes) குறித்தும் இந்நூல் ஆய்வு செய்துள்ளது. காலம். அண்டம் முதலியன குறித்து ஸ்டிஃபன் ஆக்கிங் 'காலம்' என்ற நூலில் சொல்லிய கருத்தியல்களில் பெரும்பாலானவை. பழந்தமிழ்ச் சிந்தனைகளோடு ஒப்புமை கொண்டுள்ளன என்பது விளக்கப்பட்டுள்ளது. ஆக, பழந்தமிழ்ச் சிந்தனை என்பது அறிவியல் அடிப்படையையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் கொண்ட, கிரேக்கச் சிந்தனையை விட சில விடயங்களில் மேம்பட்ட, ஒரு மிகச்சிறந்த சிந்தனை மரபு என்பதை இந்நூல் பலவகையிலும் உறுதி செய்கிறது.

