எட்டுத் திக்குகளும் மதர்த்தெழுந்து கைகட்டி நிற்க எந்த ஓர் அற்புத விளக்கை நான் தீண்டிவிட்டேன்?
இரா முழுக்கத் தவம் கிடந்தன வான்நிறைய மீன்கள். பரிதியை நேர் நின்று கண்டதோ விடிய வந்த ஒரு வெள்ளி-
உன் அகலமும் என் ஆழமும் சேர ஒரு சமுத்திரம். அடுத்து உன் வானமும் என் விண்மீன்களுமாய் உன் மார்பில் என் உறக்கம்
விடியலில் ஒரு உரசலில் சுண்விழித்துக் கண்டதில் முழு முகம் காட்டிப் புன்னகைக்கும் சூரியன் அலைகளின் மேல் என் மனைவி போல்
அதன் பிறகு நீயும் நானும் ஒன்றும் பேசவில்லை; தூரத்தில் வானமும் கடலும் ஒருமுறை மட்டும் மடித்த நீலக் காகிதமாய்
இலை கிள்ளப் பாய்ந்து நுனிக்காம்பில் முட்டி நிற்கும் ஆலம்பாலாய், கிளைதோறும் மரந்தோறும் விரல்தோறும் வாழ்வு
அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம். வந்தது. அப்படியும் வாழ்கிறோம். நம்மோடு நாம் காண இத்தென்னைகள் தம் மேனி வடுக்கள் தாங்கி
நாம் தொழும் தெய்வம் நம்மைக் காதலிக்கும் கரம் பிடிக்கும் காத்தருளும் காவு கொள்ளும்
பெண்ணைக் கண்டு பேரிரைச்சலிடுகிறாயே மனமே... பெண் யார்? பெற்றுக்கொண்டால் மகள். பெறாத வரையில் பிரகாசமான இருள். வேறொன்றுமில்லை.
நிழலன்றி உடமை ஏதுமற்று நான் நட்சத்திரங்களால் நிரம்பியிருப்பது யாருடைய பிச்சைப் பாத்திரமாய்?
தன் இதயச் சுனையருகே தாகித்து நின்றான். காடெல்லாம் அலைந்தும் காணாத மான்கூட்டம் காண.

