Author: P.Singaram
"டேய், நீ அசல பூர்ஷ்வாப் பயல் செக்குமாடு காதல், கல்யாளாம், கற்பு, பிள்ளை, சொத்து, பரம்பரை டாமிட் ஆல் "மேசையில் ஓங்கிக் குத்தினான். பீங்கான் தட்டுகளும் கோப்பைகளும் அலறிக் குதித்தன.
"எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர .உண்பதும் உறங்குவதுமாக முடியும். இது யார் வாக்கு, தெரியுமா? தாயுமானவர்!
தீயினிடை வைகியும் தோயமதில் மூழகியும், தேகங்கள் என்பெலும்பாய்த் தெரிய நின்றும், சென்னிமயிர்கள் கூடாக் குருவி தெற்ற வெயிலூடிருந்தும், வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும்' உண்மை தெரிய முயன்ற அறிஞர்களில் ஒருவர்."
"ஓஹோ! நீரிலும் நெருப்பிலும் புகுந்து பார்த்தவர் உண்மையை அறிந்தாரோ?"
"யான் அறியேன். எனக்குத் தெரிந்தவரையில், மனிதன் அறிய விழைவது ஆனால் அறிய இயலாதது உண்மை. அறியப்படுவது அழிவுறுமாதலின் அழிவற்றது அறிவிற்கு அப்பாற்பட்டதாயிற்று.
"அறிவிற்கு அப்பாற்பட்டதை அது அவ்வாறானதென்று எவ்வாறு அறிவது?"
"அறிந்தது எது, அறியாதது எது என்பதை அறிவதே அறிவின் இலக்கணம்."
"சரி சரி, உனக்கு முற்றிவிட்டது. இனிக் கோவணத்தைக் கட்டிக்கொண்டு' கிளம்ப வேண்டியதுதான்."
"உடை குறித்து எனக்கும் பண்டைய முனிவர்களுக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. மனிதனை மடமையில் பிணைக்கும் தளைகளில் ஆடைக்கு முதலிடம் உண்டு. அது நிற்க, திருச்சிராப்பள்ளி முனிவர் என்ன சொன்னார்?"
"தாயுமானவரா? பெரிய பாறாங்கல்லைத் தூக்கி உன் தலையில் போடச் சொன்னார்."
"ஒருபோதும் சொல்லார் - சொல்லியிரார். அவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய முனிவரன்றோ! தாயுமானவர் சொன்னார்: எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும், உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமல்..."

