Author: P.Singaram
பொன்னே மணியே புனைபூங்கோதாய்! என் இல்லத்தரசியாயிருக்க நீ உடன்படுவது என் பாக்கியமே. ஆனால், நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பைவிட முடிந்திருந்தும் வெறுப்பவனின் வெறுப்பு மிக மிகக் கொடிதன்றோ! காரளகப் பெண்சிகாமணியே! நான் மந்தையில் இருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி, பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி,ஓட்டிப்பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிகிறேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னிடையாய்! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச் சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக் கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச் செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும் வேண்டேன்! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும் பெண் மயிலே. நான் தன்னந் தனியன். என் காதலி! மார்பிற் படுத்து மயலூட்டி மகிழ்வித்து மறப்பூட்டும் நாயகி! அன்னையற்ற எனக்குத் தாயாகி மடியிற் கிடத்தித் தாலாட்டவல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அமுதூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ...?

