Author: M.Gopala Krishnan
எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைக் கலைத்திறனில், தமிழில் தனக்கு முந்தைய தேர்ந்த முன்னோடிப் படைப்பாளிகளின் சாயல்கள் உண்டு. அதே சமயம் காட்சிகளை நுட்பமாகவும் கூர்மையாகவும் புலனுணர்வுக்குத் தைக்கும்படித் தீட்டுவதில் அவர்கள் எவருக்கும் குறையாத திறன் காட்டுவதற்கும், முடிந்தால் தாவ முயல்வதற்குமான ஓர் ஆற்றல் இருக்கிறது.
அறிவு மற்றும் நம் வித்தைகளுக் கெல்லாம் அப்பால் செயல்படுவது என்ன என்பதில்தான் கலையின் மேன்மை இருக்கிறது. கலையின் மேன்மை வரையறுக்க அத்துணை எளிதானதில்லை என்றாலும் இதயத்தாலும் அறிவின் ஓர் அலசல் கொண்டும் ஒருவாறு உணர்த்திவிடக் கூடியதுதான்.
மெய்மை மீதும், விடுதலை மீதும் இயற்கையின் பேரொழுங்கின் சாயலில் மனித சமூகத்தில் அன்பையும் அழகையும் உருவாக்க முயலும் இரகசியமான இயக்கத்தையே தன் உதிரத்திலும் படைப்பிலும் கொண்டிருப்பவனே கலைஞன் என்றும் பெயருக்குத் தகுதியாயிருக்கிறான்.

