உலகளாவிய கரங்கள் வேண்டும் எனக்கு எல்லோரையும் அணைத்து மகிழ. எல்லாப் பறவைகளின் சிறகுகளிலும் என் கண்கள் இருக்க வேண்டும், அனைவரையும் ஒருசேரக் காண்பதற்கு. போகுமிடமெல்லாம் காற்றென் குரலையும் கொண்டுபோனால் எல்லோருக்காகவும் பாடுவேன். உலகத்து மண் முழுதும் என் ஊன் கலந்து உரமாகி பயிர் வளர்ந்து மரம் வளர்ந்து மலருண்டாகி உங்களுக்கென்றாக வேண்டும். உங்கள் கவலை மீன்களையெல்லாம் நீந்தவிட பெருங்கடலாய் என் மனதிருக்க வேண்டும். வளைந்த முதுகென்றாலும் வலுவானதாய் வேண்டும். உங்கள் சுமைகளைத் தாங்க. உங்கள் பாவங்களுக்கான ஒட்டுமொத்தச் சம்பளம் நானே பெற வேண்டும். உங்கள் கதவுகளைத் தட்டும் தோல்விகளுக்கும் துயரங்களுக்கும் என்னைச் சுட்டிவிட்டு விடுபட்ட மான்கள்போல நீங்கள் துள்ளியோட வேண்டும். அதற்கு நிகராய் என் நெஞ்சில் மலைத் தொடர்போல திடம் வளர வேண்டும். விளக்காகக் குடைந்த என் கபாலத்தில் உதிரந்தோய்ந்த நாளங்களைத் திரியாக்கிச் சுடராகி உங்கள் வழிக்கு விளக்காகும் பேறு பெற வேண்டும்.
top of page
bottom of page

