Author: V.Amalan Stanley
இது புத்தரின் சரிதை. வரலாற்று ரீதியாகவும், உண்மையில் நிகழ்ந்தவற்றையும் சேர்த்து, சூத்திரங்களின் அடிப்படையில் இந்நூலை உலகமறிந்த ஜென் ஆசிரியர் திச் நாட் ஹஞ்ச் ('தே' என்று பாசத்துடன் அழைக்கப்படுகிறார்.) தன் கற்பனைத்திறம் கலந்து ஒரு வரலாற்றுப் புதினமாகத் தந்துள்ளார். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட அரசியல் வேட்கைகள், சாதியக் கொடுமைகள், பெண்களுக்கான தளைகள், அவற்றைப் போக்குவதற்கான தீவிர காரணங்கள், இக்காலத்திற்கும் பொருந்துவது ஆச்சரியமே. ஆசிரியர் உரையில் குறிப்பிட்டது போல, இந்நூல் பௌத்தத்தின் மூன்று பெரும் பிரிவுகளின் சாரமான கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும், இக்கதையில் இயல்பாகப் பேசப்படுகின்றன. தனிமனிதரது அறிவார்த்தங்களுக்கும் பிரக்ஞைபூர்வமான கிரகிப்புகளுக்கும் ஏற்ப புத்தரின் மூலப்போதனைகள் எப்படி பரிணாமப்படுகின்றன என்பதை மிகத் துல்லியமாகவும் எளிமையாகவும், கதையின் போக்கிலேயே நிகழ்த்திக்காட்டுகிறார்.

