Author: V Amalan Stanley
பெர்னியின் ஜென் தியானமென்பது அவரது வாழ்க்கைக் கதையில் ஒரு அம்சம் தான். அதை ஓர் இயக்கமாகவே மாற்றிமைத்தவர் பெர்னி. தியானமென்பது வெறும் மடங்களுக்குள்ளும். தியான மண்டபங்களுக்குள்ளும் தனிமனிதரால் நடத்திக் கொள்ளப்படுவது என்பதை மீறி அதை தெருவில் நிகழ்த்திப் புதுமைகள் செய்தவர். மனிதப் படுகொலைகள். இனவெறி, பிற்பட்டோர், ஒதுக்கித் தள்ளப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழிடங்கள் என எங்கெல்லாம் புரிதலும் தொண்டும் தேவைப் படுகிறதோ அவ்விடங்களில் தியானப் பயற்சிக்கும், ஞானமடைதலுக்கும். போதி சத்துவ குணாம்சங்களை ஊடேற்றுவதற்கும் முயன்றவர். யாவற்றையும் ஒன்றோ டொன்றாய்ப் பிணைத்திருக்கும் இந்த வலையின் ஓர்மையைத் தற்கால வலைத் தளத்தோடு ஒப்பிடுகிறார். தெருவோர தியானக் கூடுகையின் முதற்பேறு தன் அடையாளத்தை, தன் கவுரவத்தை முற்றிலும் தன்னார்வத்துடன் இழந்து நிற்பதுதான் என்கிறார். "நீயொரு பொருட்டல்ல" என்று கண்டும் காணாது போகும் சமூகத்தினை எந்த முன்முடிவுகளுமின்றி எதிர்கொள்வது. நாதியற்றிருப்பது. தொடர்பறுத்து நிர்கதியாய் சில நாட்கள் வாழ்வது பெரும் புரிதலுக்கும், பரிவிரக்கத்திற்கும். தனக்கும் இச்சமூகத்துக்குமான நேரடி உறவின் கண்டறிதலுக்கும் வழிவகுக்கும். அது அன்பு, கருணை, பரோபகாரம் ஆகிய மானுட அம்சங்கள் இச்சமூகத்தினூடாக வெளிப்படுவதற்கான முக்கியத்துவத்தை நேரடியாக. களத்தில் உணர்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும். அதுவே உள்ளொளி, ஞானம், தர்மம் என்கிறார். அதன் பொருட்டு தன் ஜென் அடையாளங்களைக் கூடத் துறந்தவர் பெர்னி.

