Author: Maanaseegan
எம்.எஸ்.வி. இளையராஜா ஆகிய இரு மேதைகளுக்குப் பிறகு புது அலையெனப் புறப்பட்டு வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடைய வருகை தமிழ்த்திரையிசையை மட்டுமல்ல இந்தியத் திரையிசையையே மாற்றியமைத்தது. முப்பது ஆண்டுகளாக அவர் உருவாக்கிய பாதையையே இன்றும் கூட பலரும் பின்பற்றி வருகின்றனர். அவரைத் தாண்டிச் செல்கிற அளவுக்கு வேறொரு புதிய இந்திய இசையமைப்பாளர் இதுவரை உருவாகவில்லை. பல்வேறு கலாச்சாரங்களின் இசையை இந்தியத் தன்மையோடு தமிழுக்குத் தந்தவர் ரஹ்மான். அதனாலேயே உலகளாவிய அங்கீகாரத்தையும் அடைந்தார்.
இந்த நூல் ரஹ்மான் இசையின் அழகியலை இசை அறியாத ரசிகனின் கோணத்தில் முன்வைக்கிறது. தொண்ணூற்றாறு வரை வந்த சில ரஹ்மான் படங்களின் இசையை ரசிகனின் துள்ளலோடு கொண்டாட விழைகிறது. எழுத்தாளனாக அறியப்படும் ஒருவனுக்குள் பழக்க தோஷத்தால் படிந்து விட்ட இசை ரசனையின் வெளிப்பாடாக இதனைப் புரிந்து கொள்ளலாம். 'இசை சூஃபி' நூலுக்கு பெரிய நோக்கங்கள் எதுவுமில்லை. 'இது ஒரு நன்றிக்கடன் 'அவ்வளவுதான். இந்த நூலின் எல்லையும், தனித்துவமும் அது மட்டும்தான்.

