Author: Pamayan
மு.பாலசுப்பிரமணியன் 'நேயம்' என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாள ராகவும் தளது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலாளராக தமிழகம் முழுவதும் இயங்கியவர். 'புதிய கல்வி' இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை ஏராளமான கட்டுரைகளை தினமணி, இந்து மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர் தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை 'தாளாண்மை வேளாண்மை' என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர். அவ்வியக்கத்தின் செயலாளர், தாளாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் இலக்கியம், சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை. எழுதிய நூல்கள் அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் இறையாண்மை. விசும்பின் துளி, வேளாண்மையின் விடுதலை.

