Author: Aarumuga thamizhan
தமிழனுக்கென்று சொந்தமாகச் சமயமோ மெய்யியலோ கிடையாது; அவன் கடன் வாங்கிக் காலம் தள்ளுகிறவன்' என்று சிலர் இன்றைக்கும் நம்புகிறார்கள்.
தமிழனுக்குச் சமயமோ மெய்யியலோ இல்லாமலில்லை. ஆனால் அவை அமைப்புருவாக்கப்பட்டவையாக இல்லை. ஏனென்றால் அவற்றை அமைப்புருவாக்குகின்ற கட்டாயம் அற்றைத் தமிழனுக்கு இல்லை. காலம் அத்தகைய கட்டாயத்தைத் தமிழனின்மீது திணித்தபோது சைவத்தின் சார்பில் அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிளம்பியவன் திருமூலன் என்ற தமிழ்ச்சித்தன்; சைவ சமயத்தை வரைமுறைப்படுத்தியும் சைவ சித்தாந்தத்தை வரையறைப்படுத்தியும் பணி முடித்தவன்.
'சித்தன் என்பவன் கட்டமைப்புகளின் எதிரி; அவன் சமயங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபடாதவன்' என்று சித்தர்களை வரையறுக்கிற முயற்சி திருமூலரையும் தனது எல்லைக்குள் அடக்கிக்கொள்ளக் கைகள் நீட்டுகிறது. நீட்டிய கைகளுக்குள் திருமூலர் அகப்படுகிறாரா அல்லரா என்ற கேள்வியை முன்வைத்துக்கொண்டு மெய்யியலுக்கும் சமயத்துக்கும் திருமூலர் தந்த கட்டமைப்பை ஆராய்கிறது இந்நூல்.

