Author: Francis kiruba
சொல்லாட்சி, படிமங்களின் தனித்துவம், கூடவோ குறையவோ செய்யாமல் கதாபாத்திரங்களின் நாவுகளில் அந்தந்த கணத்தில் புகுந்து வெளியேறும் கூர்மையான உரையாடல்கள், கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கும் போதெல்லாம் புதுப்பொலிவு வாய்த்துவிடும் அபூர்வமான காட்சிகள், தரிசனமாக உருமாறும் கவித்துவம், உடலாக அன்றி ஆன்மாவாகவே கூடிப் பிரியும் கதாபாத்திரங்களின் தனித்துவம், மணலாக நீளும் ஒவ்வொரு வரியைக் கடக்கிற போதும் நம் உயிரில் கசிந்துவிடும் நீரூற்று என்று இந்த நாவலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழில் முன்னுதாரணமே இல்லாத பெரும் சாதனை இந்த நாவல்.
பிரான்சிஸ் ஒரு சுயம்புவைப் போல் கீழிறங்கி, தன்னைத்தானே சிலுவையில் அடித்து காயங்களைச் சிறகுகளாக்கி ஒரு பறவை செய்திருக்கிறார். சந்தனப் பாண்டியும் பிரான்சிஸூம் வேறல்ல.
சந்தனப் பாண்டியின் வாழ்வும் அவன் அகத்தின் தேடல்களும் அவனுக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்த மொழியின் நீர்மையுமே இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது. அவன் எந்தப் பாதை வழியாகவும் நடக்கவில்லை. எந்த நதியிலிருந்தும் கிளை பிரியவில்லை. தானே முயன்று பறந்த பறவையின் பாதை கானகமாகிப் பூத்துக் குலுங்கி நம் விழிகளின் முன்னே கன்னியாகி விரிந்து நிற்கிறது.
எனக்கும், என் போன்ற ஒருசிலருக்கும் 'கன்னிதான் தமிழ் நாவல்களின் உச்சம் என்று தோன்றுகிறது.

