ஒரு வகையில் இதைச் சரித்திர நாவல் எனலாம். இரண்டாம் உலகப்போர் காலத்திய இந்திய - அயல் நாட்டு சரித்திர நிகழ்ச்சிகளுடன் ஒரு தனிப்பட்ட மனிதனின் உண்மையான தொடர்பை ஆதாரமாகக் கொண்ட கதை இது. இது வெறும் கற்பனையல்ல; உண்மை நிகழ்ச்சி. சுதந்திரப்போர், யுத்த வர்ணனைகள் பெரும் பாலும் உண்மையானவை. டாக்டர் கேசவராவ் பசிபிக் சமுத்திரத்தீவில் இரண்டரை ஆண்டு பெற்ற தனிச்சிறப்புகள் கொண்ட, அபூர்வமான அனுபவங்களையும் சிந்தனைகளையும் ரிகார்டு செய்ததில் எனக்கு முதல் திருப்தி.'
எம்.எஸ்.கல்யாண சுந்தரம் 28-3-1901ல் மதுரையில் ஒரு சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும் ஹிந்தியில் பிரபாகர் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி அம்மையாரிடம் கல்விப் பயிற்சி பெற்றார். உருது, தெலுங்கு, வங்காளி, சமஸ்கிருதம், ஜெர்மன், குஜராத்தி மொழிகள் அறிந்தவர். தந்தி இலாகாவில் பொறியாளர் பதவியிலிருந்த போது காந்தியின் கட்டளைப்படி வேலையைத் துறந்து சமூகத் தொண்டாற்றினார். ஆங்கிலத்திலும், தமிழிலும், ஹிந்தியிலும் பல பத்திரிகைகளில் எழுதினார். ஹிந்தி - தமிழ், ஆங்கிலம் - ஹிந்தி அகராதிகள் தயாரித்திருக்கிறார். பிற நூல்கள்: பகல்கனவு (நாவல்), பொன்மணல் (சிறுகதைகள்).

