கி.அ. சச்சிதானந்தம் தத்துவம், வரலாறு, இலக்கியம், நுண்கலைகள் ஆகிய துறைகளில் தீவிர ஈடுபாடும் பரந்த அறிவும் கொண்டவர். குறிப்பாக இந்தியவியலின் அனைத்துக் கிளைகளையும் நன்கு அறிந்தவர். அதற்காக இந்தியா முழுவதும் பலமுறை பயணம் செய்திருக்கிறார். நண்பர்களால் 'நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் இந்த 64 வயதிலும் மேலும் அறிந்து கொள்வதில் முனைப்பாக இருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்தே பழந்தமிழ் இலக்கியங்களில் கொண்ட ஈடுபாடு இன்று அவரை உலக இலக்கியங்களில் புலமை மிக்கவராக ஆக்கியிருக்கிறது. 'எழுத்து' காலத்திலிருந்து தமிழின் நவீன இலக்கிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கல்லூரி நாட்களிலிருந்தே எழுதியும் மொழிபெயர்த்தும் வருகிறார்.
தன் ஆளுமையைப் பறைசாற்றிக் கொள்ளாதவர். தன்னை முன்னிலைப்படுத்த விரும்பாததால் எதையும் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. நண்பர்களின் வற்புறுத்தலால் இவர் எழுதியவற்றின் ஒரு சிறு பகுதி இப்போது நூல் வடிவம் பெறுகிறது.

