Author: Karthick netha
காமத்தின் வேகத்தைவிட வேகமானதா ஒளியின் வேகம்?
தன் ஞானத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தலைசொறிகிறான் தம்மபதன்.
தன் துறவை மண்பொம்மையாக மாற்றிக் குழந்தைக்குத் தந்தான். சிறிது நேரம் விளையாடிவிட்டு தூக்கிப்போட்டுவிட்டது குழந்தை.
மிஞ்சிய மீதிக் கனவே நாம் எல்லோரும் என்கிறாய் நான் மட்டுமே என்கிறேன் நான்.
பார்த்துக்கொண்டிருந்த திகம்பரன் மழைக்குக் கடவுளின் விந்தென்றும் இலைக்கு ஜீவவாசல் என்றும் பெயர் வைத்தான்.
தியானத்தில் இருந்ததாகப் பிதற்றிய புத்தன் உண்மையில் தியானத்தில்தான் இருந்தானா? அரச மரம் மட்டுமே போதி மரம் புத்தனாக இருந்தால், எல்லா மரங்களும் போதி மரங்களே பறவையாக இருந்தால்.
கொடிக்கயிற்றில் காயும் வெயிலை எடுத்துப் போக இரவால் மட்டுமே முடியும் சும்மா இருந்து ஞானமடைவதில் உனக்கென்ன சிரமம்?
நிறையப் பூச்சிகளைத் தின்றும் பறக்கத் தெரியாத சுடர் மனமா?
அவர்களின் கண்களில் இருந்து எண்ணங்கள்தாம் வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தன.
திருவோடு செய்து தரும் கோதுமை நிறச் சிறுமிக்கு என்ன தந்துவிட முடியும் நான் துறவி எனும் பொய்யையும் நீ சிறுமி இல்லை எனும் உண்மையையும் தவிர எதிலும் நிறை பூரணமே!
பால் கவிச்சியோடு படைக்கப்பட்டுவிட்டது
பரம்.
ஈமத் திரியில் ஆடும் ஒளியின் ஓசைக்கு பயந்து மௌனமாய் இருத்தல் மாஞானம் என்பான் ரமண ரிஷி. ஒளியாய் இருத்தல் அவளாலும் ஆகாதென்பேன் நான்.

